கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்டம் தொடக்கம்:2 ஆயிரம் பெண்களுக்கு ஏ.டி.எம். கார்டுகள், தகவல் கையேடுகள்அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்

Update: 2023-09-15 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்திட்ட தொடக்க விழாவில், 2 ஆயிரம் பெண்களுக்கு ஏ.டி.எம். கார்டுகள், தகவல் கையேடுகளை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

மகளிர் உரிமைத்தொகை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம், ஜெகதேவியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன் (பர்கூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக உணவு துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு, 2 ஆயிரம் மகளிருக்கு ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் தகவல் கையேடுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கலைஞரின் ஆட்சி காலத்தில் காவல் துறையிலும் பெண்களுக்கு பணி பொறுப்புகள், அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை தந்தார். தற்போது அவரது வழியில் ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 54 பேருக்கு 5 வகையான நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல மகளிர் இலவச பஸ் பயண திட்டம், மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

வங்கி கணக்கில் வரவு

தற்போது மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த விழாவில் 2 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டு, தகவல் கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 தாலுகாவிற்கு உட்பட்ட 1,094 நியாயவிலைக்கடைகள் மூலம் 5,64,212 குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளது.

மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு 2 கட்டங்களாக 5,64,212 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அவற்றில் 4,58,527 பேர் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஏ.டி.எம். கார்டு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப்பயனாளிகளின் வங்கி கணக்கில் 14.09.2023 அன்று முதலே ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், மகளிர் உரிமைத்தொகையை பெறும் பெண்களுக்கு பிரத்யேகமான ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுறள், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், உதவி கலெக்டர் பாபு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகராட்சி தலைவர் பரிதா நவாப், முன்னாள் எம்.பி.க்கள் வெற்றிச்செல்வன், சுகவனம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்