பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன மோசடி

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-24 22:07 GMT

பெரம்பூர்,

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தை சேர்ந்தவர் சேகு (வயது 50). வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவர், கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். மீண்டும் வெளிநாடு செல்ல கடந்த 12-ந்் தேதி சென்னைக்கு வந்தவர், மண்ணடியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார்.

பின்னர் வடக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அங்கு நின்ற மர்மநபர், அங்கு பணம் இல்லை என்று கூறி அருகில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்துக்கு அவரை அழைத்துச் சென்றார்.

அங்கு பணம் எடுக்க உதவி செய்வதுபோல் சேகுவிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கிய மர்மநபர், அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை சொருகினார். பின்னர் கார்டு வேலை செய்யவில்லை என கூறி சேகுவிவிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

பணம் மோசடி

சிறிது நேரத்தில் சேகுவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் சேகு தன்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது, அது தன்னுடைய கார்டு இல்லை என்பதை அறிந்தார்.

பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்த நபர், தனது கார்டை எடுத்துக்கொண்டு போலி கார்டை கொடுத்து சென்றதும், பின்னர் தனது கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து மோசடி செய்ததும் தெரிந்தது. இதுபற்றி வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் சேகு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது

குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்பட்டியை சேர்ந்த தம்பி ராஜ் (46) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேகுவின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ராயபுரம் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.50 ஆயிரம் எடுத்து உள்ளார். பின்னர் திருவான்மியூரில் உள்ள ஒரு நகை கடையில் ரூ.99 ஆயிரத்து 600-க்கு தங்க சங்கிலி வாங்கியதும். அதனை மைசூரில் விற்றதும் தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் தங்க சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான தம்பி ராஜை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்