ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
நாகர்கோவிலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ைள முயற்சி நடந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ைள முயற்சி நடந்தது.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஏ.டி.எம். மையம் சேதம்
நாகர்கோவிலை அடுத்த புத்தேரியில் தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலையில் அந்த பகுதியில் உள்ளவர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றபோது எந்திரம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஏ.டி.எம். மையத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அபாய மணி பயங்கர சத்தத்துடன் ஒலித்தது. இதனால் மாட்டி விடுவோம் என கருதிய மர்ம நபர்கள் தங்களது முயற்சியை கைவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
பல லட்சம் ரூபாய் தப்பியது
இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்ச ரூபாய் பணம் தப்பியது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மையத்தில் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே அதன் ஹார்டுடிஸ்க்கை வங்கி அதிகாரிகள் மூலம் பெற்று ஆய்வு செய்து மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.