ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி
வாலாஜாபாத் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த திம்மராஜம் பேட்டையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர்.
இரவு கண்காணிப்பில் ஈடுபட்ட ரோந்து போலீசார் வழக்கம் போல சைரன்ஒலி எழுப்பிக்கொண்டு வந்தனர். இதை பார்த்த கொள்ளையர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஏ.டி.எம். மையத்தை இரவு நேரத்தில் கண்காணிக்க வந்த ரோந்து போலீசார் சென்று பார்த்தபோது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதையும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கையும் கழற்றி செல்லப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடப்பாரையை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர்.
வலைவீச்சு
இது குறித்து உடனடியாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் அளித்தை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியட் சீசர், வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
போலீஸ் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டு சோதனையும் நடத்தி, கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர்.
கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.3 லட்சம் வைத்திருந்த நிலையில் அதில் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக ரூ.52 ஆயிரம் மட்டுமே இருந்தது தெரியவந்தது. பணம் எதுவும் கொள்ளை போகாத நிலையில் போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.