ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
சின்னமனூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை முயற்சி
சின்னமனூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். காமாட்சிபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் அருகே சென்றபோது ஏதோ சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு நின்று ஏ.டி.எம். மையத்திற்குள் பார்த்தனர். அப்போது அங்கு தேங்காய் உரிக்கும் கம்பியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். மேலும் எந்திரம் சேதமடைந்து இருந்தது.
இதனால் அவர் அந்த கம்பியை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை கம்பியால் உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் தப்பியது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வருசநாடு அருகே உள்ள குமணன் தொழு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பாண்டியன் என்பது தெரியவந்தது.
தொழிலாளி கைது
பின்னர் போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மேல்விசாரணை நடத்தினர். அதில், கைதான பாண்டியன் தனது ஊரில் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்தனர்.
ஆனால் சரியான வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் சிரமம் அடைந்தார். இதனால் கடனை அடைப்பதற்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் ெதரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து தொழிலாளி கொள்ளையடிக்க முயன்ற துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.