ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் கைது
கொடைக்கானலில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 16-ந்தேதி அங்கு வந்த மர்ம நபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தார்.
இதற்கிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க வித்தியாசமான ெஹல்மெட் அணிந்திருந்தது தெரியவந்தது. அந்த ஹெல்மெட்டை துருப்புச்சீட்டாக கருதி போலீசார் விசாரணையில் இறங்கினர். கொடைக்கானல் நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் அந்த ஹெல்மெட்டை அணிந்தபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 20), ராஜகம்பீரம் ஊரை சேர்ந்த விஜய் (20) என்று தெரியவந்தது. பொங்கல் பண்டிகையை கொண்டாட கொடைக்கானலுக்கு வந்த இவர்கள், தங்களிடம் பணம் இல்லாததால் நாயுடுபுரத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் திருட முயற்சி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு, வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.