13.6 அடியாக குறைந்த ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம்
திண்டுக்கல்லுக்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் 13.6 அடியாக குறைந்தது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஆத்தூரில் காமராஜர் அணை உள்ளது. இந்த அணையில் 23.5 அடி உயரம் வரை நீர் தேக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குடகனாறு, கூழையாறு ஆகிய 2 ஆறுகளில் இருந்து காமராஜர் அணைக்கு தண்ணீர் வருகிறது.
இந்த காமராஜர் அணையில் இருந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக, திண்டுக்கல் நகருக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையின் போது காமராஜர் அணை நிரம்பி வருகிறது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் காமராஜர் அணை நிரம்பியது. அதன்பின்னர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒருசில நாட்கள் மட்டுமே மழை பெய்தது.
நீர்மட்டம் 13.6 அடி
மழை பொய்த்து போனதால் அணைக்கு தண்ணீர் வரவில்லை. எனினும் அணையில் இருந்து திண்டுக்கல் நகருக்கு தினமும் குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 2 மாதமாக கோடைவெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது.
இந்த நிலையில் நேற்றைய தினம் காமராஜர் அணையின் நீர்மட்டம் 13.6 அடியாக குறைந்தது. அதேநேரம் தற்போது அணையில் இருக்கும் தண்ணீரை கொண்டு திண்டுக்கல் நகருக்கு 4 மாதங்களுக்கு மேல் வினியோகம் செய்ய முடியும். அதற்குள் தென்மேற்கு பருவமழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்துவிடும். இதனால் திண்டுக்கல் நகருக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யலாம் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.