புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் தடகள 'டிராக்' சேதம்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தடகள ‘டிராக்’ சேதத்தால் பயிற்சி பெறுவதில் வீரர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்க வீரர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-03 18:51 GMT

மாவட்ட விளையாட்டரங்கம்

புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள தடகளம், கால்பந்து, ஆக்கி, கூடைப்பந்து, கைப்பந்து, பாக்சிங் உள்ளிட்டவை விளையாட வசதிகள் உள்ளது. இதுதவிர நீச்சல் குளமும், உடற்பயிற்சி கூடமும் உள்ளது. விளையாட்டு வீரர்கள் விளையாடுவது, பயிற்சி பெறுவதோடு, பொதுமக்கள் பலர் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வதும் உண்டு. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு முந்தைய நாளில் பலத்த மழை பெய்ததால் மைதானத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியது. இதனால் மழை நீரை வெளியேற்றி, சகதியை சரி செய்ய கிரஷர் மண் லாரி, லாரியாக மைதானத்தில் கொட்டப்பட்டது. அதன்பின் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் விழா முடிந்த பின் மேடை அலங்காரம் அகற்றப்பட்ட பின் கிரஷர் மண் அப்படியே கிடந்தன. அதனையும் படிப்படியாக அகற்றும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் ஓட்டப்பந்தயத்திற்கான மைதானத்தில் தடகள ஓடுபாதை என அழைக்கப்படும் 'டிராக்' பாதி இடங்களில் மேடு, பள்ளமாகவும், கிரஷர் மண்ணும் பாதி கிடக்கிறது. இதனால் வீரர்கள் ஓட்டப்பந்தயத்திற்கான பயிற்சி பெறுவதில் சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மைதானத்தை சீரமைக்க வேண்டும் என வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

400 மீட்டர் டிராக்

இது குறித்து மைதானத்தில் ஓட்டம் பயிற்சி பெற்று வந்த ஸ்ரீ மதன் என்பவர் கூறுகையில், ''ஓட்டப்பந்தயத்திற்கான மைதானத்தில் மண்கள் சரிசமாக இருக்க வேண்டும். வீரர்கள் ஓடக்கூடிய டிராக்கில் மேடு, பள்ளம், கரடு, முரடானவை, கற்கள் எதுவும் இருக்க கூடாது. இந்த மைதானமும் அப்படித்தான் இருந்தது. 400 மீட்டர் தூரம் கொண்ட இந்த மைதானத்தில் பாதி இடம் நன்றாக உள்ளது. விழா நடைபெற்ற இடத்தில் இருந்து மண் முழுமையாக அகற்றப்படாதது மைதானத்தை சரி சமமாக சமன் செய்யாதது தான் பெரும் குறையாக உள்ளது. இதனால் வீரர்கள் பயிற்சி பெற முடியவில்லை. பலர் மைதானத்திற்கு வெளியே வெளி இடங்களில் பயிற்சி பெறுகின்றனர்.

இந்த மைதானத்தில் இப்படிப்பட்ட பாதையில் ஓடினால் கால்களில் பாதிப்பு ஏற்படும். வீரர்கள் முழுமையாக திறமையை பயன்படுத்தி ஓட முடியாது. எனவே இதனை சரி செய்ய வேண்டும். ரோடு லோர் போன்ற எந்திரம் கொண்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும். செயற்கை இழை ஓடுதளம் விரைவில் அமைக்கப்படும் என கூறி வருகின்றனர். அதற்கு முன்பாக தற்போது உள்ள மைதானத்தை பராமரிக்க வேண்டும். குவிந்து கிடக்கும் மண்களை அகற்ற வேண்டும். வீரர்கள் விளையாட மற்றும் பயிற்சி பெறுவதற்கு வசதியாக ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

அதிகாரி விளக்கம்

சாலை சிவமனம் என்பவர் கூறுகையில், ''மைதானத்தை முறையாக பராமரித்தால் போதும். ஏற்கனவே கொட்டப்பட்ட மண்களை அள்ளி வருகின்றனர். இருப்பினும் மைதானம், மைதானம் மாதிரி இல்லை. அதற்கேற்ப வசதி ஏற்படுத்த வேண்டும். ஓட்டப்பந்தயத்திற்கான மைதானத்தை சீரமைக்க வேண்டும்'' என்றார்.

இதேபோல மைதானத்தில் பயிற்சி பெற்ற சில வீரர்களும் மைதானத்தை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரனிடம் கேட்ட போது, ''மைதானத்தில் இருந்து கிரஷர் மண் முழுமையாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மண் அள்ளப்பட்டு ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை வாகனம் மூலம் வெளியே கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் முழுமையாக அகற்றப்பட்டு மைதானம் சீரமைக்கப்பட உள்ளது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்