தேனியில் பள்ளி மாணவிகளுக்கு தடகள போட்டிகள்

தேனியில் பள்ளி மாணவிகளுக்கு இடையே முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடந்தது.

Update: 2023-02-22 20:30 GMT

தேனியில் பள்ளி மாணவிகளுக்கு இடையே முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடந்தது.

விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான தேனி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 8-ந்தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி நடந்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், பொது பிரிவினர் என 5 பிரிவாக போட்டிகள் நடக்கின்றன. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான குழு போட்டிகள், அரசு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், பொது பிரிவினருக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடந்தன.

மாணவிகள் உற்சாகம்

இதில் 641 மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தன. இதில் மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் இன்றும் (வியாழக்கிழமை), கல்லூரி மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நாளையும் (வெள்ளிக்கிழமை) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. நேற்று நடந்த போட்டிகளை மாநில தணிக்கை துறை அலுவலர் மோகன் தொடங்கி வைத்தார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்