கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-05 18:45 GMT

தடகள போட்டி

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமை தாங்கி தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஒலிம்பிக் தீப ஒளியை ஏற்றி வைத்து போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், மாணவர்கள் வெற்றியையும், தோல்வியையும் சமமாக கருத வேண்டும். முயற்சியையும், தன்னம்பிக்கையும் தளரவிடக்கூடாது. வெற்றி பெரும் மாணவர்கள் மாநில மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும். தோல்வியுற்ற மாணவர்கள் இதனை பயிற்சி களமாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.

இதில் 19 வயதுக்குட்பட்ட ஆண்-பெண் பிரிவினருக்கும், 17 வயதுக்குட்பட்ட ஆண்-பெண் பிரிவினருக்கும், 14 வயதுக்குட்பட்ட ஆண்-பெண் பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டி நடைபெற்றது.

மாணவர்களுக்கு பரிசு

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு விளையாடினர். 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர் (உயர்நிலைப்பள்ளி) ஆரோக்கியசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வக்குமார் உள்பட உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்