விளையாட்டு வீரர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-30 19:08 GMT

ராணிப்பேட்டை

சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பரிசுத்தொகை

ஆண்டுதோறும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள், 2 பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி வருகிறது.

விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களை சமர்ப்பித்தல் வேண்டும். இதுதவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நிர்வாகி, ஒரு ஆட்ட நடுவர் ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. விருது வழங்குவதற்கு முந்தைய 2 வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இத்திட்டத்தின்படி 2021 -22ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டுக் கழகம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் முதன்மைச் செயலருக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

இதற்கான விண்ணப்பங்களை www.sdat.gov.in http://www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உரையின் மேல் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என எழுத வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உறுப்பினர், செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.6.22-ந்தேதியாகும்.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நிர்வாகிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை அலுவலக வேலை நாட்களில் 7401703483 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்