அத்தனூர் அம்மன் குப்பயண்ணசாமி கோவில் ஆண்டு விழா
அத்தனூர் அம்மன் குப்பயண்ணசாமி கோவில் ஆண்டு விழா
முத்தூர்,
முத்தூர் அத்தனூர் அம்மன் குப்பயண்ணசாமி கோவில், சின்ன முத்தூர் செல்வக்குமாரசாமி கோவில் கும்பாபிஷேக 3-ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முதல் நிகழ்ச்சியாக சின்ன முத்தூர் செல்வக்குமாரசாமி கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு, கணபதி ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டு செல்வக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று மாலை 3 மணிக்கு முத்தூர் அத்தனூர் அம்மன் குப்பயண்ணசாமி கோவிலில் அக்னி யாக குண்டத்தில் சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு அத்தனூர் அம்மன், குப்பயண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.விழாவை முன்னிட்டு இரவு 7 மணிக்கு வள்ளி கும்மியாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பக்தர்கள், கோவில் காணியாளர்கள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.