குன்னூர் அருகே அட்டகாசம்:சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு
குன்னூர் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
குன்னூர்
குன்னூர் அருகே அம்பிகாபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி தேயிலை தோட்டங்கள் உள்ளன. தற்போது குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் அம்பிகாபுரம் காளியம்மன் கோவில் அருகே சிறுத்தை ஒன்று கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து குன்னூர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் சிறுத்தை பிடிபடும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.