உளுந்தூர்பேட்டையில் தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
உளுந்தூர்பேட்டையில் தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 35). இவர் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு வந்தார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை நகர் ரெயில்வே மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வெங்கடேசனின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு கட்டையில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வெங்கடேசன், பலத்த காயமடைந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை நகர் ரெயில்வே பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றிவிட்டு விழுப்புரம் பகுதியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வரும் வாகனங்களை விருத்தாசலம் சாலை வழியாக மாற்றியமைக்க வேண்டும், அவ்வாறு அமைத்தால் விபத்துகளை தடுக்கலாம் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.