தூத்துக்குடி விமான நிலையத்தில்விமான ஓடுதளம் விரிவாக்க பணிகள் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும்:கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான ஓடுதளம் விரிவாக்க பணிகள் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

Update: 2023-02-15 18:45 GMT

தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கப் பணிகள் வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று கனிமொழி எம்.பி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், ஆலோசனை குழு தலைவருமான கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார்.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சிவபிரசாத் வரவேற்றார்.

கூட்டத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணிகள் மற்றும் விமான சேவைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஆலோசனை குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விமான ஓடுதளம்

பின்னர் கனிமொழி எம்.பி கூறியதாவது:-

தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. விமான நிலைய விரிவாக்கத்துக்கு விமான நிலைய ஆணையம் மூலம் கேட்கப்பட்ட அளவுக்கு நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. விமான ஓடுதளம், பயணிகள் முனையம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விமான ஓடுதளம் அமைக்கும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளன.

மீதம் உள்ள பணிகள் வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும். பயணிகள் முனையம் அமைக்கும் பணி செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு விமான சேவை அதிகரிக்கப்படும். இரவு நேர விமான சேவையும் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்