திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-08-11 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு மற்றும் பெண்கள் கல்வி மையம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற தலைப்பில் ஒருநாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தூத்துக்குடி வக்கீல் சுபாசினி வில்சன், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் வக்கீல் சுபாசினி வில்சன் பேசுகையில், பெண்கள் செல்போனை சரியான முறையில் பயன்படுத்தாததால் வரக்கூடிய அச்சுறுத்தல்களையும், அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்பதையும் விளக்கி பேசினார். மேலும், பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட விதிகளை பற்றியும், அதனை முறையாக பயன்படுத்துவது எப்படி? என்றும் விளக்கம் அளித்தார்.

ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி பேசுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான சட்டவிதிகள் பற்றியும், போலீஸ் நிலையங்களில் வழங்கப்படும் சட்ட ஆலோசனைகள் குறித்தும் விளக்கி பேசினார். மேலும், பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, தங்கள் முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இக்கருத்தரங்கில் உள்தர மதிப்பீட்டு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலன்டு நைட் வரவேற்று பேசினார். பெண்கள் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராம.ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் ெசய்து வைத்தார். பெண்கள் கல்வி மையத்தின் உறுப்பினர்கள் பேராசிரியர்கள் முருகேஸ்வரி, சரண்யா ஆகியோர் நன்றி கூறினர். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள்பாலு, பசுங்கிளி பாண்டியன், மாலைசூடும் பெருமாள், வேலாயுதம், வசுமதி, அந்தோணி சகாய சித்ரா, கோகிலா, செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் முதுநிலை மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்