வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கு குட்டியின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கு குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி ஊழியர்கள் கொண்டாடினர்.

Update: 2022-06-11 10:04 GMT

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1,265 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து வசதிகளுடன் இயற்கை சூழலில் 178 வகையிலான 2,300 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து கடந்த 1.10.2005 அன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஒரு ஜோடி மனித குரங்கு கொண்டுவரப்பட்டு அந்த குரங்குக்கு கவுரி என்ற சூசி, கொம்பி என்று வண்டலூர் பூங்கா ஊழியர்கள் பெயர் வைத்து அதனை சிறந்த முறையில் பராமரித்து வந்தனர்.

பார்வையாளர்கள் பூங்காவில் நுழைந்ததுமே பார்த்து ரசிக்கும் முதல் இருப்பிடமே இந்த மனித குரங்குகள் அடைக்கப்பட்டுள்ள இருப்பிடமாகும். இந்த 2 மனித குரங்குகளுக்கும் ஒரு செயற்கை குகை உருவாக்கப்பட்டு அதில் மனித குரங்குகள் ஜோடிகள் குளிப்பதற்கு 'ஷவர்' அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷவரில் கோடை காலங்களில் மனித குரங்குகள் குளித்து ஆட்டம் போடுவதை பார்வையாளர்கள் ரசித்து மகிழ்வார்கள்.

இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மனித குரங்கு கொம்பி (வயது 29), கவுரி (24)க்கும் கொரோனா காலகட்டத்தில் காதல் மலர்ந்து இணை சேர்ந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி, 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அழகான ஆண் குட்டியை ஈன்றது. புதிதாக பிறந்த ஆண் மனித குரங்கு குட்டிக்கு பூங்கா ஊழியர்கள், அதிகாரிகள் ஒன்று சேர்ந்து ஆதித்யா என்று பெயர் சூட்டினர்.

இந்த நிலையில் மனித குரங்கு ஆதித்யாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் முடிவு செய்தனர். 'ஹாப்பி பர்த்டே ஆதித்யா' என்று எழுதப்பட்டிருந்த கேக்கை பூங்காவின் உதவி இயக்குனர் காஞ்சனா வெட்டும்போது ஊழியர்கள் அனைவரும் வாழ்த்து பாடி மகிழ்ச்சியோடு மனித குரங்கு குட்டியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் பிறந்த நாளையொட்டி மனித குரங்கு குட்டி ஆதித்யாவுக்கும், அதன் தாய் கவுரி, தந்தை கொம்பிக்கு பூங்கா ஊழியர்கள் பல்வேறு பழங்கள், உறைய வைத்த கேக்கை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்