தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்சிறுதானிய உணவு அங்காடி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானிய உணவு அங்காடி விரைவில் திறக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Update: 2023-07-31 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவு அங்காடி திறக்கப்பட உள்ளது. இந்த அங்காடியில் 14 வகையான உணவுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

சிறுதானியம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவு அங்காடி அமைக்கப்பட உள்ளது. இதற்காக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறுதானிய உணவு தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் விற்பனைக்காக வைக்கப்பட உள்ள உணவுபொருட்கள் குறித்து செயல்முறை விளக்கம் காண்பித்தனர்.

14 வகை உணவு

பின்னர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறும் போது, சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலும் சிறுதானிய உணவு அங்காடி அமைக்க தமிழ்நாடு அரசினால் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய உணவு அங்காடி அமைக்க கோரம்பள்ளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டமைப்பில் உள்ள 5 உறுப்பினர்களுக்கு திருச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்கள் 14 வகையான உணவு பொருட்கள் செய்முறை விளக்கத்தை காண்பித்தனர்.

இந்த அங்காடியில் வரகரிசி காய்கறி பிரியாணி, குதிரைவாலி தயிர் சாதம், முருங்கை கீரை சூப், வாழைத்தண்டு சூப், கம்பு முறுக்கு, திணை பொங்கல், கேழ்வரகு இட்லி, கேழ்வரகு குளோப் ஜாம், திணை பாயாசம், காராமணி வடை, கீரை வடை, சோள பணியாரம், கார சேவு, காய்கறி ஆம்ப்லெட் ஆகிய சிறுதானிய உணவுகள் இடம்பெற உள்ளன என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபுத்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்