பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கலெக்டர் ஆய்வு
பெரும்புலிபாக்கம் மற்றும் அம்மூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
பெரும்புலிபாக்கம் மற்றும் அம்மூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், கால்வாய், குளம், சாலை பணிகள், பூங்கா, தனிநபர் கழிவறை, தொகுப்பு வீடுகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவேரிப்பாக்கம் அடுத்த பெரும்புலிபாக்கம் ஊராட்சியில் உள்ள, பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சாலை, பூங்கா, விளையாட்டு திடல், குடிநீர் வசதி, தொகுப்பு வீடுகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்ற பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு சுவைத்து பார்த்து குறைகளை சுட்டி காட்டினார். குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகளையும் ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் கோரிக்கை
பின்னர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பூங்கா மற்றும் விளையாட்டு திடலில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொது மக்கள் ஈஸ்வரன் கோவில் தெருவில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும், அரசினர் உயர்நிலைப்பள்ளியில் சமையல் கூட்டம் அமைக்க வேண்டும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி பிச்சாண்டி, பொறியாளர் ஏகநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
அம்மூர்
அம்மூர் பேரூராட்சி 17வது வார்டு பகுதியில், உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்திலும் வீடுகள் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள சமுதாய கூடத்தை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டுமென குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து, உணவில் ருசி சரியாக இல்லை, குழந்தைகள் ருசியோடு சாப்பிடும் வகையில் சமையல் செய்யுங்கள் என அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த அங்கன்வாடி மையத்தை பேரூராட்சி பொதுநிதியிலிருந்து சீரமைத்திட உத்தரவிட்டார். .
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர்.