கோபி அருகே தடப்பள்ளி வாய்க்காலில் சேற்றில் சிக்கி விடிய, விடிய தவித்த மூதாட்டி

கோபி அருகே தடப்பள்ளி வாய்க்காலில் சேற்றில் சிக்கி விடிய, விடிய தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்

Update: 2023-10-21 23:55 GMT

கோபி அருகே தடப்பள்ளி வாய்க்காலில் சேற்றில் சிக்கி விடிய, விடிய தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

சேற்றில் சிக்கிய மூதாட்டி

கோபி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. அவருடைய மனைவி பொன்னம்மாள் (வயது 80). இவர் நேற்று மாலை பாரியூர் சாலை வழியாக செல்லும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதிக்கு கீரை பறிப்பதற்காக சென்றுள்ளார்.

பின்னர் வாய்க்கால் கரையோரம் இறங்கி அவர் கீரைகளை பறித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் வாய்க்காலின் சேற்றில் சிக்கிக்கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக கால் சேற்றில் இறங்கி அவரது இடுப்பு வரை புதைந்தது. இதனால் அவரால் சேற்றில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

காப்பாற்ற முயற்சி

மேலும் மாலை நேரம் என்பதாலும், விவசாய தொழிலாளர்களும் வேலை முடிந்து சென்று விட்டதாலும் யாரிடமும் உதவி கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விடிய, விடிய உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பொன்னம்மாள் தவித்து வந்தார். உணவின்றியும், தண்ணீரின்றியும் கடும் அவதிப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக விவசாய பணிக்காக சென்ற தொழிலாளர்கள் மூதாட்டியை பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் சேற்றில் சிக்கி இருந்த பொன்னம்மாளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிகளவு சேறு மற்றும் ஆகாயத்தாமரைகள் இருந்ததால் மீட்க முடியவில்லை.

பாதுகாப்பாக மீட்பு

இதைத்தொடர்ந்து இதுகுறித்து கோபி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சேற்றில் சிக்கிய மூதாட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் பாதுகாப்பாக மீட்டு் கரைக்கு கொண்டு வரப்பட்டார்.

இரவு முழுவதும் தூக்கம் இல்லாததால் பொன்னம்மாள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சேற்றில் மூதாட்டி சிக்கி விடிய, விடிய தவித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்