தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில்ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

Update: 2023-04-16 18:45 GMT

தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

ஊர்வலம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக போலீஸ் துறை அனுமதி அளித்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலையில் நடந்தது.

தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள காமராஜ் கல்லூரி அருகில் இருந்து அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் திருச்செந்தூர் ரோடு, முனியசாமிபுரம் மெயின் ரோடு, பிரையண்ட் நகர், சிதம்பரநகர், வி.வி.டி சிக்னல் சந்திப்பு வழியாக சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. அங்கு பொதுக்கூட்ட மேடை அருகே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்வேறு பயிற்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டன.

பொதுக்கூட்டம்

தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எஸ்.தினகரன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ஸ்ரீீகுலசேகர ராமானுஜ மடம் ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.எஸ் மாநில மக்கள் தொடர்பு நிர்வாகி நா.சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராம.சீத்தாராமன், மாவட்ட செலாளர் சந்திரசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாகாந்தி, மாநகர தலைவர் ஜெயக்குமார், கன்னியாகுமரி கோட்ட இணை செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஸ்ரீவைகுண்டம்

இதே போன்று ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் முன்பிருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பாரத ஸ்டேட் வங்கி அருகே உள்ள வ.உ.சி கலையரங்கத்தில் நிறைவடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி துரை தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்