சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றவர் கைது

சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றவரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2023-09-20 21:11 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கூட்டுறவு வங்கி

சத்தியமங்கலத்தில் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று முன்தினம் காலை ஒருவர் வந்தார். அவர் வங்கியில் இருந்த நகை மதிப்பீட்டாளர் மூர்த்தி என்பவரிடம் சென்று, புதிய கணக்கு தொடங்கி நகைகளை அடகு வைத்து கடன் பெற வந்துள்ளதாக கூறினார். இதையடுத்து மூர்த்தி வந்தவரிடம் கணக்கு தொடங்க புகைப்படம் வேண்டும் என்று கேட்டு வாங்கி பார்த்தார்.

அப்போதுதான் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் பரவிய தகவல் மூர்த்திக்கு ஞாபகம் வந்தது. அதாவது கரூர் சுங்ககேட் கூட்டுறவு வங்கியில் ஒருவர் போலி நகைகளை அடகு வைக்க வந்ததாகவும், அவரை ஊழியர்கள் பிடிக்கும் முன் தப்பி ஓடிவிட்டதாக அந்த தகவலில் கூறப்பட்டு இருந்தது. மேலும் வாட்ஸ்-அப் தகவலில் பதிவேற்றி இருந்த புகைப்படமும் நகையை அடகு வைக்க வந்தவரின் புகைப்படமும் ஒரே மாதிரியாக இருந்தது.

போலி நகைகள்

இதையடுத்து வந்தவரிடம், புதிய கணக்கு தொடங்க சிறிது நேரம் ஆகும் உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு, மூர்த்தி சக ஊழியர்களிடம் இந்த தகவலை கூறினார். உடனே உஷாரான ஊழியர்கள் வங்கியின் கதவை பூட்டிவிட்டு, அந்த நபரை பிடித்து சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் சத்தியமங்கலம் ஓம்சக்தி நகரை சேர்ந்த முருகன் (வயது 47) என்பதும், அவர் கூட்டுறவு வங்கியில் அடகு வைக்க கொண்டு வந்திருந்தது போலி நகைகள் என்பதும், அவர்தான் கரூர் சுங்ககேட் கூட்டுறவு வங்கியில் ஏற்கனவே போலி நகையை அடகு வைக்க முயன்றவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து, அவரிடம் இருந்த போலி நகைகள், போலி ஆதார் கார்டு, செல்போன், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்