ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட கலெக்டர்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஈடுபட்டார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஈடுபட்டார்.
தூய்மை பணியில் கலெக்டர்
ராமேசுவரத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது அக்னி தீர்த்த கடற்கரையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொண்டு அக்னி தீர்த்த கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
நகரசபை தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் கண்ணன், சுகாதார அலுவலர் தியாகராஜன், நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம் தாசில்தார்கள் மார்ட்டின், அப்துல் ஜபார், ரோட்டரி கிளப் தலைவர் ஸ்ரீதர், செயலாளர் தனபாண்டியன், மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி பாண்டி, தி.மு.க. கட்சி நிர்வாகி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமேசுவரம் மிகப்பெரிய சுற்றுலா தலமாகும். அது போல் இங்கே பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியை தூய்மையாக வைத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக கடற்கரை பகுதிகளில் குப்பைகளை வீச வேண்டாம். மேலும் பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது, கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ராமேசுவரம் பகுதிக்குள் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவு உள்ளது. மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நகர தூய்மை குறித்து நடந்த விழிப்புணர்வு பேரணியானது கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து தொடங்கி சன்னதி தெரு வழியாக அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் முடிவடைந்தது.