தபால் நிலையங்களில்பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு தொடங்கலாம்;கண்காணிப்பாளர் கருணாகரபாபு தகவல்
தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று கண்காணிப்பாளர் கருணாகரபாபு தகவல் தொிவித்துள்ளாா்.
ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தேசிய அளவில் இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், அஞ்சல் துறை சார்பில் 'AMRITPEX 2023' என்ற தேசிய அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி வருகிற பிப்ரவரி மாதம் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த 2 விழாவுக்காக, மகளிர் மேம்பாடு நிதிசார் உள்ளடக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் உள்ள 322 தபால் நிலையங்களில் வருகிற பிப்ரவரி மாதம் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் புதிய சிறு சேமிப்பு கணக்கு தொடங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது 10 வயதுக்கு உட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இந்த கணக்கை தொடங்கலாம். சேமிப்பு கணக்கு தொடங்க வரும்போது, பெண் குழந்தையின் பிறப்பு சான்று நகல், தாய் அல்லது தந்தையின் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் அல்லது பான் கார்டு நகலை அருகே உள்ள தபால் நிலையத்தில் சமர்ப்பித்து, பெற்றோர் மூலம் புதிய சிறுசேமிப்பு கணக்கு தொடங்கி பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 0424 2258066 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.