ஊட்டி தாவரவியல் பூங்காவில் 1,500 கிலோ இயற்கை உரம் விற்பனை-நகராட்சி ஆணையாளர் தகவல்

ஊட்டி தாவரவியல் பூங்கா வளாகத்தில் ஊட்டி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கு மூலம் 10 நாட்களில் 1500 கிலோ இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-01-31 18:45 GMT

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்கா வளாகத்தில் ஊட்டி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கு மூலம் 10 நாட்களில் 1500 கிலோ இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

32 டன் குப்பைகள்

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். ஊட்டி நகர பகுதிகளில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் அதிகம் உள்ளதால் கமர்சியல் சாலை, பூங்கா சாலை, லோயர் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை வேளைகளிலும், இரவு நேரங்களிலும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. பழத்தோல், முட்டை ஓடுகள், காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் போன்ற மக்காத குப்பைகள் தனியாகவும், மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசி பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்களை தனியாகவும் பிரித்தும் சேகரிக்கப்படுகின்றன. நாள் ஒன்றிற்கு 32 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் 18 டன் மக்கும் குப்பைகளாகும்.

இயற்கை உரம்

இவை தீட்டுக்கல் குப்பை கிடங்கு, காந்தல், புதுமந்து பகுதிகளில் உள்ள நுண்ணுயிர் உர தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இவற்றை விவசாயிகள் குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஊட்டி நகராட்சி சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு பூங்காவிற்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்கு இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டது. பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் ஆர்வமுடன் அரங்கினை பார்வையிட்டு, இயற்கை உரத்தை வாங்கி சென்றனர். ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் 1500 கிலோ இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் நகராட்சிக்கு ரூ.7500 வருவாயாக கிடைத்தது. இயற்கை உரம் தேவைப்படுவோர் நகராட்சியை அணுகலாம் என்ன நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்