ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவில்கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2023-04-09 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தவக்காலம்

ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். அதன் நிறைவாக ஏசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. ஏசு உயிர் துறந்த புனித வெள்ளி கடந்த 7-ந் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக நேற்று கொண்டாப்பட்டது.

சின்னக்கோவில்

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலங்களிலும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தூத்துக்குடி சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். ஏசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இதே போன்று தூய பனிமய மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

லூர்தம்மாள்புரம்

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் நேற்று காலையில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி, பங்கு தந்தை ஆன்றனி புருனோ ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். தாளமுத்துநகர் தூயமடுஜெபமாலை ஆலயத்தில் பங்குதந்தை நெல்சன்ராஜ் தலைமையிலும், சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் மங்களகிரி மெர்சி தியான இல்ல இயக்குனர் மகிழன் தலைமையிலும், ஆரோக்கியபுரம் ஆரோக்கியநாதர் ஆலயத்தில் தாளமுத்துநகர் உதவி பங்குதந்தை வின்சென்ட் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

பாதுகாப்பு

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் நள்ளிரவு நேரத்தில் மக்கள் ஆலயத்துக்கு சென்று வருவதற்கு வசதியாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 11.50 மணி அளவில் இயேசு உயிர்ப்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாசியஸ் அடிகளார் மற்றும் தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் சகாயம் அடிகளார் ஆகியோர் நிறைவேற்றினர். இதில் ஆறுமுகநேரி, ராஜமணியபுரம், சோனகன்விளை, காணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை பிரதீஷ் அடிகளார் தலைமையில் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதேபோன்று காயல்பட்டினம் சிங்கித்துறை செல்வமாதா ஆலயத்தில் பங்கு தந்தை சுதாகர் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

சேர்ந்தபூமங்கலம்

ஆத்தூரை அடுத்துள்ள சேர்ந்தபூமங்கலம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்கு சந்தை செல்வன் அடிகளார் தலைமையில் உயிர்ப்பு பெருவிழா திருப்பலி நேற்று அதிகாலையில் நடைபெற்றது. பழைய காயல் பரிபூரணமாதா ஆலயத்தில் பங்குதந்தை வினிஸ்டன் அடிகளாரின் தலைமையில் உயிர்ப்பு பெரு விழா சிறப்பு திருப்பலி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது.

இதேபோல் புண்ணாக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு திருப்பலி இரவு 11.50 மணிக்கு நடைபெற்றது. பங்குதந்தை பிராங்க்ளின் அடிகளார், உதவி பங்குதந்தை ஜெபஸ்டின் அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார்.

ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆத்தூர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50, நேற்று அதிகாலை 2.30 மணி, 4 மணியளவில் உயிர்ப்பு சிறப்பு ஜெபங்கள் நடைபெற்றன.

மடத்துவிளை

மடத்துவிளை தூய யோவான் ஆலயத்தில் சேகர குரு சிமியோன் பிரபு டானியல் தலைமையிலும், பூவரசூர் பரி. திருத்துவ ஆலயத்தில் சேகரகுரு சுதாகர் தலைமையிலும் ரத்தினாபுரி தூய அந்திரேயா ஆலயம், அருணாசலபுரம் மிகாவேல் ஆலயம், ஆத்தூர் கிறிஸ்து ஆலயத்திலும் நேற்று அதிகாலையில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு ஜெபம் நடைபெற்றது. இதனை காயல்பட்டினம் சேகர குரு ஞானசிங் எட்வின் கலந்து கொண்டார்.

ஆறுமுகநேரி சுப்பிரமணியபுரம் பவுலின் ஆலயத்திலும், ராஜமன்யபுரம் பரி திருத்துவ ஆலயத்திலும் ஈஸ்டர் பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சாயர்புரம்

சாயர்புரம் பரிசுத்த திருத்துவ ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேகர குரு இஸ்ரவேல்ராஜாதுரைசிங் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஆராதனையும், பரிசுத்த நற்கருணைஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதே போல குலையன்கரிசல் அபிஷேகநாதர் ஆலயத்தில் நடந்த ஈஸ்டர் பண்டிகையை சேகரகுரு கிருபாகரன் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். அதிகாலையில் பரிசுத்த நற்கருணை ஆராதனையும், விசேஷ ஜெபமும் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்