மேட்டூர் அனல்மின் நிலையத்தில்ஏலம் எடுக்க உதவி செய்வதாக கூறி ரூ.25 ஆயிரம் மோசடிபாதிக்கப்பட்டவர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏலம் எடுக்க உதவி செய்வதாக கூறி ரூ.25 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தாா்
அம்மாபேட்டை அருகே உள்ள பட்டஞ்சாவடியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44). இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-
கட்டிடம் கட்டுவதற்கு பயன்படும் சிமெண்டு கற்கள் (பிளை ஆஸ் பிரிக்ஸ்) தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னிடம் அம்மாபேட்டையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் சிமெண்டு கற்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து பெறுவதற்கான ஏலத்தை எடுத்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அதற்கு செலவாகும் என்று கூறிய அவர் என்னிடம் இருந்து ரூ.25 ஆயிரத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் 2 ஆண்டுகளாகியும் ஏலம் எடுத்து கொடுக்கவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு தர மறுப்பதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார். இதேபோல் அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.