கோவில்பட்டி, கயத்தாறில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கோவில்பட்டி, கயத்தாறில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திருச்செந்தூர், வேம்பார் கடலில் கரைக்கப்பட்டது.

Update: 2022-09-04 11:34 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி, கயத்தாறில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூர், வேம்பார் கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள்

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. நேற்று காலை 9 மணி முதல் அனைத்து சிலைகளும் கயத்தாறு அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்ட ராமேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் 22 வாகனங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பிள்ளையார் கோவில் தெரு பழைய கடம்பூர் சாலை, புதிய கடம்பூர் சாலை, விமான சாலை, ஆஸ்பத்திரி சாலை, பஜார் மதுரை மெயின் ரோடு உள்பட்ட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தன. இந்த நிகழ்ச்சியின் போது முளைப்பாரி ஊர்வலம், கும்மியாட்டம், வாள் வீச்சு, சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கடலில் கரைப்பு

இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சங்கரவேல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மருதையா, பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன்,வடக்குஇலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் கணபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பல்ேவறு கிராமங்கள் வழியாக சென்ற ஊர்வலம் திருச்செந்தூர் சென்றடைந்தது. அங்கு கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி சார்பில் 13 விநாயகர் சிலைகள் கயத்தாறு திருநீலகண்ட ஈஸ்வரர் கோவிலில் இருந்து மாவட்ட தலைவர் லெட்சுமி காந்தன் தலைமையில் ஆத்திகுளம், சிவஞானபுரம், அரியவன்பட்டி, பாரதிநகர் உள்ளிட்ட முக்கிய ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதில் பூசாரி பேரவை தென்மண்டலசெயலாளர் முத்துகிருஷ்ணபட்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி அகில பாரத இந்து மகா சபா சார்பில் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் 30 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது. நேற்று அந்த சிலைகள் வாகனங்களில் லட்சுமி மேம்பாலம் இனாம்மணியாச்சி சந்திப்பு பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.

அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில செயல் தலைவர் செந்தில், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் புருஷோத் தமன், மாவட்ட தலைவர் சங்கர் ராஜா மாவட்ட செயலாளர்கள் ஆரோக்கியராஜ், முத்துக்குமார், பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ண ரகு, மாவட்ட இளைஞரணி தலைவர் கணேஷ் குமார், துணைத்தலைவர் பீமபாரதி, நகர இளைஞரணி தலைவர் காந்தாரி முத்து உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் கடல்

ஊர்வலத்திற்கு முன்பு மாணவ- மாணவிகள் சிலம்பாட்டம் நடத்தி சென்றனர். ஊர்வலம் மெயின் ரோடு, புது ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக செம்பவல்லி அம்மன் கோவில் முன்பு சென்றடைந்தது. அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாலையில் விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வேம்பார் கடற்கரையில் கரைக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரெண்டு வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த், பத்மாவதி, மங்கையர்கரசி, சுகா தேவி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்