கவுந்தப்பாடி சந்தையில்கட்டு சேவல் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை
கவுந்தப்பாடி சந்தையில் கட்டு சேவல் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி சந்தையில் கட்டு சேவல் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
சேவல் சண்டை
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தை பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது போல் ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் சேவல் சண்டை நடப்பது வழக்கம்.
குறிப்பாக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் ஆர்வம் உள்ள பொதுமக்கள் நாட்டு கோழிகள் மற்றும் கட்டு சேவல்களை (சண்டைக்கோழி) வளர்த்து வருகின்றனர். அதில் கட்டு சேவல்கள் வளர்ப்பவர்கள் அவற்றுக்கு தரமான உணவுகள் கொடுப்பதுடன், நீச்சல் மற்றும் சண்டை பயிற்சிகளும் கொடுப்பது வழக்கம். அப்படி நன்கு பயிற்சி பெற்ற கட்டு சேவல்கள் அதன் சுறுசுறுப்பான செயல்பாட்டுக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை ஆவதும் உண்டு. தற்போது புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் சூழ்நிலையில் கவுந்தப்பாடி வாரச்சந்தையில் கட்டு சேவல் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
ரூ.10 ஆயிரம்
கவுந்தப்பாடியில் வாரம்தோறும் புதன்கிழமை கோழி சந்தை நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் வாரச்சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கான நாட்டு கோழிகள் மற்றும் கட்டு சேவல்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இதில் நல்ல துடிப்பான கட்டு சேவல்கள் ஒவ்வொன்றும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த சேவல்களை கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுடன், அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.