காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு
ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கலெக்டர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கலெக்டர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 16-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கலெக்டர் கார்த்திகேயன், கோவில் பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பற்றியும், பாதுகாப்பு வசதி பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முன்னதாக அகஸ்தியர்பட்டியில் இருந்து சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிப்பதனால் அகஸ்தியர்பட்டியில் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமும் மற்றும் அங்கு இருந்து பக்தர்களை அரசு பஸ்களில் ஏற்றி செல்வதற்கும் உள்ள இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
குடிநீர் வசதி
பின்னர் அவர் சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகனிடம் அகஸ்தியர்பட்டியில் பக்தர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தும் இடத்தை சீர்படுத்தி கொடுக்கவும், அப்பகுதியில் தற்காலிக குடிநீர் வசதிகளையும், தற்காலிக சுகாதார வளாக வசதியும் ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டார்.
ஆய்வின் போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், அம்பை தாசில்தார் சுமதி, அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் குமார், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தாணுமூர்த்தி, நெல்லை அரசு போக்குவரத்துக் கழக வணிகப்பிரிவு மேலாளர் சுப்பிரமணியன், பாபநாசம் போக்குவரத்து கழக மேலாளர் சுரேஷ், மின்வாரிய இளநிலை பொறியாளர் ராமகிளி, உதவி பொறியாளர் விஜயராஜ், இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த், பொதுப்பணித்துறை பொறியாளர் மகேஸ்வரன், முண்டந்துறை வனவர் ராஜன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.