மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக காரைக்குடியில் வாலிபரை கொலை செய்தது அம்பலம்
மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாக காரைக்குடியில் வாலிபரை படுகொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
காரைக்குடி,
மார்க்ெகட் ஏலம் எடுப்பது தொடர்பாக காரைக்குடியில் வாலிபரை படுகொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
வாலிபர் படுகொலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைட்டான்பட்டியை சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித் (வயது 27). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கோர்ட்டு உத்தரவின்படி காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் காரணமாக தினமும் கையெழுத்து போட்டு வந்தார். இதற்காக தனது நண்பர்களுடன் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் போலீஸ் நிலையம் செல்வதற்காக விடுதியில் இருந்து வெளியே வந்தார்.அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அறிவழகனை சுற்றி வளைத்து ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிவிட்டது.
4 தனிப்படை அமைப்பு
இது குறித்து அறிவழகனின் தந்தை ஞானசேகரன் கொடுத்த புகாரில், மைட்டான்பட்டியை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரின் தரப்பினருக்கும் இவர்களுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும், விருதுநகரில் மார்க்கெட் ஏலம் எடுப்பது தொடர்பாகவும் பிரச்சினை இருந்து வந்ததாகவும் அதனை தொடர்ந்து அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். அதன் பேரில் இந்த கொலை வழக்கில் சந்தேக எதிரிகளாக ஆதிநாராயணன், கருப்பையா, தனுஷ், குமாரவேல் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை கைது செய்ய 4 தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையில், கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டபோது அந்த காரை விற்று விட்டதாகவும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதன் பின் அந்த கார் விருதுநகரில் ஒருவரிடம் அடகு வைக்கப்பட்டிருந்ததும் காரை அடகு வைத்த நபரும் தலைமறைவாகிவிட்டார் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள், செல்போன் பதிவுகள் ஆகியவற்றை கொண்டும் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.