கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-11-11 18:45 GMT

கடமலைக்குண்டு கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் ஸ்கேன், உடல் பரிசோதனை உள்ளிட்ட காரணங்களுக்காக கர்ப்பிணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சுகாதார நிலையத்தில் 4 டாக்டர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 2 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதே போல கடந்த சில மாதங்களாக சுகாதார நிலையத்தில் எந்தவித பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரக் கேடான நிலையில் உள்ளது. மேலும் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கடமலைக்குண்டு சுகாதார நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் டாக்டர்களை நியமனம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்