ஈரோட்டில் வனஉயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோட்டில் வனஉயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வன உயிரின வாரவிழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வனத்துறை சார்பில் வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்ட வன அதிகாரி கவுதம் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஈரோடு திண்டலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பெருந்துறைரோடு வழியாக செங்கோடம்பள்ளத்தில் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக நடந்து சென்றார்கள்.
அப்போது, மரம் வளர்ப்பதன் அவசியம், அழிந்துவரும் வன உயிரினங்களை பாதுகாப்பது உள்ளிட்டன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் வனச்சரகர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.