ஈரோட்டில்ரூ.50 லட்சம் மஞ்சள் நூதன முறையில் திருட்டு
ஈரோட்டில் நூதன முறையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மஞ்சளை திருடிச்சென்ற தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோட்டில் நூதன முறையில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மஞ்சளை திருடிச்சென்ற தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மஞ்சள் குடோன்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாளையம் புதூரை சேர்ந்தவர் செல்வன் (வயது 60). விவசாயியான இவர், ஈரோடு பார்க் ரோட்டில் உழவன் என்ற பெயரில் மஞ்சள் குடோனை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். இங்கு செல்வன் உள்பட ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் மஞ்சளை கொண்டு வந்து இருப்பு வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய எடுத்து செல்வார்கள்.
இந்த குடோனில் ரவி என்பவரும், அவரது மகன் லிங்கேஸ்வரனும் தங்கி, குடோனை பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் செல்வன், குடோனில் உள்ள மஞ்சள் மூட்டைகளை சோதனை செய்தபோது, முதல் வரிசையில் உள்ள மஞ்சள் மூட்டைகளை தவிர அடுத்த வரிசையில் அடுக்கப்பட்ட மூட்டைகளில் மஞ்சளுக்கு பதிலாக தேங்காய் நார் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நூதன முறையில் திருட்டு
இதுபோல் 1,278 மூட்டைகளில் மஞ்சளுக்கு பதிலாக தேங்காய் நார்கள் இருந்துள்ளன. இதன் மூலம் மூட்டைகளில் தேங்காய் நார்களை வைத்து விட்டு மஞ்சளை நூதன முறையில் திருடி உள்ளனர். திருட்டுப்போன மஞ்சளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ெசல்வன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சளை திருடிய ரவி மற்றும் அவரது மகன் லிங்கேஸ்வரன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.