ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆர்.டி.ஓ. ஆய்வு
ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்யப்பட்டன.
ஈரோட்டில் தனியார் பள்ளிக்கூட வாகனங்களை ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் ஆய்வு செய்தார்.
ஆய்வு
தமிழகத்தில் தற்போது பள்ளிக்கூடங்களில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைகள் முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதற்கு முன் பள்ளிக்கூட வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி தனியார் பள்ளிக்கூட வாகனங்களுக்கான ஆய்வு நேற்று ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.இ.டி. பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெற்றது. இதற்காக ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை என 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தனியார் பள்ளிக்கூட வாகனங்கள் வந்தன.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தை ராஜன், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வெங்கட்ரமணி (கிழக்கு), பதுவைநாதன் (மேற்கு), சக்திவேல் (பெருந்துறை) ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குட்பட்ட 41 பள்ளிக்கூடங்களில் இருந்து 394 வாகனங்களும், ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குட்பட்ட 13 பள்ளிக்கூடங்களில் இருந்து 67 வாகனங்களும், பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்குட்பட்ட 45 பள்ளிக்கூடங்களில் இருந்து 485 வாகனங்களும் என மொத்தம் 946 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
சான்றிதழ்
இந்த ஆய்வில், பள்ளிக்கூட வாகனங்களில் அரசு அறிவித்துள்ளபடி மஞ்சள்நிற பெயிண்டு அடிக்கப்பட்டுள்ளதா? வாகனங்களில் மாணவர்கள் அமர்ந்து இருக்கும் இருக்கைகள் சரியாக இருக்கிறதா? அவசர கால கதவு முறையாக செயல்படுகிறதா? தீயணைப்பு கருவிகள் உள்ளதா? முதலுதவி பெட்டி உள்ளதா? வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? வாகனத்தில் பிரேக் சரியாக உள்ளதா? கோர்ட்டு உத்தரவு படி வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
அனைத்தும் சரியாக இருந்த வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்களை அதிகாரிகள் வழங்கினர். குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்து கொண்டு வாருங்கள் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன் பின்னர் அந்த வாகனங்களை மீண்டும் ஆய்வு செய்து தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழிப்புணர்வு
இதையொட்டி பெருந்துறை தீயணைப்பு நிலையம் சார்பில் நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் தீப்பிடித்தால் அதனை தீயணைப்பான் கருவியைகொண்டு எப்படி அணைப்பது என்பது பற்றியும், வீடு மற்றும் அலுவலகங்களில் ஏற்படும் மின் கசிவு, சமையல் கியாஸ் கசிவால் ஏற்படும் தீயை எப்படி அணைக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆய்வின்போது ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், சுரேந்திரகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.