ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செவித்திறன் குறையுடையோர் காத்திருப்பு போராட்டம் விசில் அடித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்
செவித்திறன் குறையுடையோர் காத்திருப்பு போராட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செவித்திறன் குறையுடையோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விசில் அடித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
காத்திருப்பு போராட்டம்
ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோருக்கான நலச்சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு சங்க தலைவர் கே.மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.கே.மோகன்ராஜ், பொருளாளர் என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வழங்க முகாம் நடத்த வேண்டும். மாதாந்திர உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.
விசில் அடித்து...
ஆவின் பாலகம் அமைத்துக்கொடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த காது கேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் விசில் அடித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
குறைகளை கேட்ட கலெக்டர்
இதைத்தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, செவிதிறன் குறையுடையோருக்கான நலச்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் கலெக்டர் அவர்களிடம் கூறும்போது, 'உங்களுடைய கோரிக்கைகள் குறித்து நான் மட்டும் முடிவு எடுக்க முடியாது. இது தமிழகம் முழுவதும் உள்ள பிரச்சினை என்பதால் இதற்கான அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தான் முடிவு எடுப்பார்கள். எனினும் உங்களுடைய கோரிக்கைகளை நான் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கண்டிப்பாக எடுத்துச்செல்வேன்' என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து செவித்திறன் குறையுடையோர் தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.