குற்றாலம் மெயின் அருவியில் `திடீர்' வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருகை தந்து அருவிகளில் குளித்து செல்வார்கள்.
இதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து சீசனை அனுபவித்து, அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு சென்றனர்.
வெள்ளப்பெருக்கு
தற்போது சீசன் காலம் முடிவடைந்த நிலையிலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று மதியத்திற்கு மேல் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையினால் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியது. இதனால் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சீசன் காலம் முடிவடைந்து விட்டதால் தற்போது குறைவான சுற்றுலா பயணிகளே குற்றாலத்திற்கு வருகிறார்கள். அவ்வாறு நேற்றும் சுற்றுலா பயணிகள் வந்தனர். மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.
ஆனால் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.