பவானிசாகர் அணையில் மீன்பிடி உரிமம் தொடர்பாக மீனவர்களிடம் அதிகாரிகள் கருத்துகேட்பு

பவானிசாகர் அணையில் மீன்பிடி உரிமம் தொடர்பாக மீனவர்களிடம் அதிகாரிகள் கருத்து கேட்கப்பட்டது

Update: 2023-08-11 22:18 GMT

பவானிசாகர் அணையில் மீன்பிடி உரிமம் தொடர்பாக மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் மீனவர்களின் வீடுகளுக்கு சென்று கருத்து கேட்டனர்.

மீன்பிடி உரிமம்

பவானிசாகர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் மீன் குஞ்சுகள் விடப்பட்டு, மீன்பிடிக்கும் உரிமம் தனியாருக்கு விடப்படுகிறது. அவர்கள் மீன்களை பிடித்து மீன் வளர்ச்சி கழகத்தின் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீன்பிடி உரிமம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

இந்தநிலையில் மீண்டும் மீன்பிடிக்கும் உரிமம் டெண்டர் விடுவது தொடர்பாக அணையில் மீன் பிடிக்கும் பங்கு மீனவர்கள் மற்றும் பங்கு அல்லாத மீனவர்கள் அனைவரிடமும் கருத்து கேட்பதற்காக சென்னை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று பவானிசாகர் வந்தனர்.

கருத்து கேட்டனர்...

அதிகாரிகள் குழுவினர் அண்ணா நகர், புங்கார், சுஜில்குட்டை, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களை சந்தித்து அவர்களிடம் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகமே நேரடியாக மீன்பிடிக்கலாமா அல்லது தனியாருக்கு டெண்டர் விடலாமா என்பது குறித்து கருத்து கேட்டனர். அப்போது அதிகாரிகளிடம் மீனவர்கள், பவானிசாகர் அணையில் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு நாங்கள் குத்தகைதாரர்களுக்கு மீன்பிடித்து கொடுத்து வருகிறோம். தனியார் குத்தகைதாரர் ஒரு கிலோவுக்கு ரூ.55 கூலியாக வழங்குகின்றனர். ஆனால் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மீனவர்களுக்கு மீன் பிடிக்க நிர்ணயத்துள்ள தொகை ரூ.35 மட்டுமே.

பதிவு செய்தனர்

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தனியார் குத்தகைதாரர் ஒரு கிலோவுக்கு ரூ.55 வழங்குவதே எங்களுக்கு கட்டுபடியாகாத நிலையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் டெண்டர் விடாமல் நேரடியாக மீனை பிடித்தால் எங்களுக்கு ரூ.35 மட்டுமே வழங்குவார்கள்.

மேலும் தனியார் குத்தகைதாரர்கள் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் போது திருட்டுத்தனமாக மீன்பிடிப்பது குறைந்துள்ளது. மீன் வளர்ச்சி கழகம் மூலம் நேரடியாக மீன்பிடித்தால் பெரும்பாலான மீன்கள் திருட்டுத்தனமாக பிடித்து விற்க வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மீன்பிடி உரிமத்தை தனியாருக்கு வழங்கினால் மட்டுமே பங்கு மீனவர்கள் ஆகிய எங்களுக்கும், பங்கு அல்லாத மீனவர்களுக்கும் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றனர்

மீனவர்கள் தரப்பு கருத்துகளை மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டு, அதை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்