அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்த குதிரை
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டத்துக்குள் குதிரை புகுந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
அந்தியூர்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டத்துக்குள் குதிரை புகுந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பிரசித்திபெற்ற கோவில்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இதனால் கோவிலின் நடை தினமும் காலை 5 மணிக்கு திறக்கப்படும். காலை 6 மணி முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது
இந்த நிலையில் நேற்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். மேலும் அங்கு பக்தர்களின் கூட்டமும் காணப்பட்டது. அப்போது ரோட்டில் சுற்றித்திரிந்து கொண்டு இருந்த குதிரை கோவில் வளாகத்துக்குள் புகுந்தது. பின்னர் சாமி தரிசனம் செய்வதற்காக நின்று கொண்டிருந்த பக்தர்களின் கூட்டத்துக்குள் குதிரை புகுந்தது. இதனால் அவர்கள் அங்கு இருந்து குழந்தைகளை கையில் பிடித்தபடி அலறி அடித்துக்ெகாண்டு ஓடினர். உடனடியாக கோவில் பணியாளர்கள் குதிரையை அங்கு இருந்து விரட்டி அடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், அந்தியூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் குதிரைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு ரோட்டில் அங்கும் இங்குமாக ஓடுகின்றன. சில சமயங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது குதிரைகள் மோதி விபத்துகள் நடக்கிறது. இதனால் நாங்கள் ரோட்டில் நடமாடுவதற்கே பயமாக இருக்கிறது. மேலும் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்துக்குள் குதிரைகள் புகுந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்களின் நலன் கருதி வீதிகளில் சுற்றித்திரியும் குதிரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.