தனியார் குளிர்பான ஆலையில் லிப்டில் சிக்கி ஒப்பந்ததாரர் பலி
நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் தனியார் குளிர்பான ஆலை கட்டிடத்துக்கு கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டபோது, லிப்டில் சிக்கி ஒப்பந்ததாரர் தலை நசுங்கி பலியானார்.
நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் தனியார் குளிர்பான ஆலை கட்டிடத்துக்கு கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டபோது, லிப்டில் சிக்கி ஒப்பந்ததாரர் தலை நசுங்கி பலியானார்.
குளிர்பான ஆலை
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் தனியார் குளிர்பான ஆலை இயங்கி வருகிறது. அங்கு புதிய அலகுக்கான கட்டிடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியை மதுரை மாவட்டம் பரவை வடக்கு வெளித்தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் அரியகுமார் (வயது 33) என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு போர்க் லிப்ட் எந்திரத்தில் அரியகுமார் ஏறி நின்று கண்ணாடிகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
தலை நசுங்கி பலி
அந்த லிப்ட் எந்திரத்தை மதுரை மாவட்டம் சூரப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (26) என்பவர் இயக்கிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட் இயங்கியதாக கூறப்படுகிறது.
லிப்ட் மேல்நோக்கி தூக்கியதால் அதில் நின்று வேலை பார்த்த அரியகுமார் மேலே இருந்த சிமெண்டு காங்கிரீட் மீது மோதினார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அரியகுமார் பரிதாபமாக உயிர் இழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து உடனடியாக கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து, ஆபரேட்டர் பாஸ்கரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.