ஆஸ்துமா நோய்க்கான மருந்து-மாத்திரைகள் தேவையான அளவு உள்ளது
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆஸ்துமா நோய்க்கான மருந்து-மாத்திரைகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது என்று விழிப்புணர்வு தின கருத்தரங்கில் டீன் பிரின்ஸ் பயஸ் தெரிவித்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆஸ்துமா நோய்க்கான மருந்து-மாத்திரைகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது என்று விழிப்புணர்வு தின கருத்தரங்கில் டீன் பிரின்ஸ் பயஸ் தெரிவித்தார்.
கருத்தரங்கு
உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஆஸ்துமா நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு ஆஸ்துமா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தையொட்டி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மருத்துவப்பிரிவு கருத்தரங்க அரங்கில் ஆஸ்துமா தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்குக்கு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி நுரையீரல் சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். பொது மருத்துவ சிகிச்சைப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர் காவேரி கண்ணன் முன்னிலை வகித்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்ஹேலர் தெரப்பி
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 10 சதவீத மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆஸ்துமா நோயை தூண்டக்கூடிய காரணிகள் சுற்றுச்சூழல், சுகாதார சீர்கேடுகள் ஆகியவை ஆகும். புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்தக்கூடிய மருந்து, மாத்திரைகளும், இன்ஹேலர் தெரப்பி போன்றவையும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தேவையான அளவு இருப்பில் உள்ளது.
ஆஸ்துமா நோயின் வீரியத்துக்கு தகுந்த இன்ஹேலர் தெரப்பியை பயன்படுத்தி நோயாளிகள் நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். நோயின் காரணிகளை நாம் தடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கு காலநிலையும் ஒரு காரணம் ஆகும். மழைக்காலங்கள், குளிர் காலங்களில் ஆஸ்துமா நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். இம்மாதிரியான காலங்களில் நோயாளிகள் தங்களது நுரையீரலை பாதுகாக்க உரிய மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நோயாளிகளுக்கு விழிப்புணர்வு
நுரையீரல் சிகிச்சைத்துறை உதவி பேராசிரியை டாக்டர் நான்சி ஆஸ்துமா நோய் குறித்து பேசினார். முடிவில் டாக்டர் கார்த்திகா நன்றி கூறினார்.
முன்னதாக நுரையீரல் சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு ஆஸ்துமா நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.