ரூ.27 லட்சம் மோசடி செய்த தோட்டக்கலை உதவி இயக்குனர் கைது

கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு போலி பணியாணை வழங்கி ரூ.27 லட்சம் மோசடி செய்த தோட்டக்கலை உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-21 19:29 GMT

போலி பணியாணை

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம், திம்மாம்பேட்டையை அடுத்த புல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 53). நாட்டறம்பள்ளி ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம், கோட்டூர் பகுதியில் தோட்டக்கலை உதவி இயக்குனராக பணிபுரியும் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் வலிவலம் கிராமத்தை சேர்ந்த பாலதண்டாயுதம் (55) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அப்போது எல்லப்பனின் மகன், மருமகன் மற்றும் அவரது நண்பர்களின் மகன்கள் இருவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.27 லட்சத்தை பாலதண்டாயுதம் பெற்றுள்ளார். பின்னர் அவரது கூட்டாளிகளான தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா, பாம்பு கோயில் சந்தையை சேர்ந்த பரமசிவம், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து பணம் கொடுத்தவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை கிடைத்ததாக போலி பணியாணையை வழங்கி உள்ளார்.

உதவி இயக்குனர் கைது

அவர்கள் வழங்கியது போலி பணியாணை என தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் எல்லப்பன் பலமுறை பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானிடம், எல்லப்பன் புகார் செய்தார்.

அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை பெற்றுக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு போலி பணியாணை வழங்கிய நபர்கள் மீது திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று போலி ஆணை கொடுத்து மோசடி செய்த தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலதண்டாயுதத்தை போலீசார் கைது செய்து வாணியம்பாடிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு போலி பணியாணை வழங்கியதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்