கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்:உதவி கலெக்டர் விசாரணைக்கு மேலும் ஒரு வாலிபர் ஆஜர்

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் உதவி கலெக்டர் விசாரணைக்கு மேலும் ஒரு வாலிபர் ஆஜரானார். இதுதொடர்பான எழுத்துப்பூர்வ மனுவை வருகிற 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-03-30 20:15 GMT

சேரன்மாதேவி:

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் உதவி கலெக்டர் விசாரணைக்கு மேலும் ஒரு வாலிபர் ஆஜரானார். இதுதொடர்பான எழுத்துப்பூர்வ மனுவை வருகிற 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

உதவி கலெக்டர் விசாரணை

நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங் என்பவர், பற்களை கொடூரமாக பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த புகார் தொடர்பான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் ஒருவர் ஆஜர்

உதவி கலெக்டர் முன் ஏற்கனவே லட்சுமிசங்கர், சூர்யா, சுபாஷ் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரிடமும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் நேற்று வெங்கடேஷ் என்ற வாலிபர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் முன்பு ஆஜரானார். அவரிடம் உதவி கலெக்டர் விசாரித்து விளக்கம் பெற்றார்.

பாதுகாப்பு

இதற்கிடையே, சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு நிலவுவதால் அந்த அலுவலகத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் ஆடியோ கேட்கக்கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் வரவைழக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

10-ந்தேதி வரை மனு கொடுக்கலாம்

இந்தநிலையில் உதவி கலெக்டர் அலுவலக அறிவிப்பு பலகையில், ஒரு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இதுதொடர்பாக சாட்சியம் தெரிவிக்க விரும்பும் நபர்கள் யாரேனும் இருப்பின் வருகிற ஏப்ரல் 10-ந் தேதிக்குள் சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் முன்பு அனைத்து வேலை நாட்களிலும் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் தங்களது எழுத்துப்பூர்வமான மனுவை தாக்கல் செய்யலாம், என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்