ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் மற்றும் உறவினர்களின் ரூ.5½ கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என்று தென்மண்டல ஐ.ஜி.எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-06-28 21:05 GMT

மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான 3 பேர் மற்றும் உறவினர்களின் ரூ.5½ கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என்று தென்மண்டல ஐ.ஜி.எச்சரிக்கை விடுத்தார்.

பெண் உள்பட 3 பேர் கைது

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்தாண்டு நவம்பர் மாதம் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அந்த வீட்டில் சட்டத்திற்குப் புறம்பாக 170 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை காமராஜர் சாலை முனிச்சாலையை சேர்ந்த காளை (வயது 65), அவரது மனைவி பெருமாயி (60), பேரையூர் தாலுகா கம்மாளப்பட்டியை சேர்ந்த அய்யர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா விற்கும் தொழில் செய்து அதில் ஈட்டிய பணத்தையும், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளையும் அவரது உறவினர்கள் பெயரால் ஈட்டிய சொத்துக்களையும் பறிமுதல் செய்யலாம் என்ற சட்டம் உள்ளது. அதன் அடிப்படையில் அவர்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டும், அவர்களது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டு, சொத்து விவரங்கள் கணக்கில் எடுக்கப்பட்டது.

ரூ.5½ கோடி சொத்துகள் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகளின் அசையும், அசையா சொத்துகளின் விவரங்களை சேகரித்து அனைத்தையும் முடக்கி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன் மூலம் கைது செய்யப்பட்ட 3 பேர் மற்றும் அவர்களின் உறவினர்களின் அசையும், அசையா சொத்துக்கள், வாகனங்கள், வங்கி கணக்குகளில் உள்ள இருப்பு தொகை மற்றும் வரவு செலவு ஆகியவற்றை பற்றி விரிவாக கணக்குகள் எடுக்கப்பட்டும் நிதி விசாரணை செய்யப்பட்டது. அதில் 5 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பல அடுக்குமாடி, சொகுசு வீடுகள், நிலங்கள் என அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது.

எச்சரிக்கை

இது குறித்து தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ராகார்க் கூறும் போது, கஞ்சா தொழில் செய்வது சட்டப்படி குற்றம். கஞ்சா விற்பனை செய்வது சமூகத்தின் சீர்கேடாகும். எனவே கஞ்சா தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்கள் உறவினர்களின் சொத்துக்களை முற்றிலுமாக முடக்க கடுமையான நடவடிக்கை போலீசார் மூலம் எடுக்கப்படும்.

மேலும் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் அனைவரின் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

இது தவிர அவர்களின் சொத்தும், அவர்களது உறவினர்களின் சொத்துகளும் சட்டப்படி முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்