அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் சீண்டிப்பார்க்கவோ, தொட்டுப்பார்க்கவோ முடியாது. நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் அதுதான் ஒரேநாடு, ஒரே தேர்தல் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-04-02 09:47 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக சாலை மார்க்கமாக சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இருந்து சொந்த ஊரான சேலத்திற்கு புறப்பட்டு சென்றார்எடப்பாடி பழனிசாமி . முன்னதாக காலை 8 மணிக்கு இல்லத்தில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆரத்தி எடுத்தும், பூசணிக்காய் உடைத்தும், பட்டாசுகளை வெடித்தும் தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, தாம்பரம் சானிட்டோரியம் பகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்ச்யில், எடப்பாடி பழனிசாமிக்கு கிரேன் மூலம் சுமார் 200 கிலோ எடை கொண்ட ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டது. இதனை தொடந்து அதிமுக நிர்வாகிகளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து, சென்னை மதுராந்தகம் வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுராந்தகம் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழக கொடிக்கம்பம் அருகே அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில் பட்டாசு வெடித்து, மேள தாளங்களுடன் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பூரண கும்ப மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து மலர் தூவியும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து விழுப்புரத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது:-

அதிமுக இயக்கத்தை உருவாக்கிய போது எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்தனர். அதேபோல் நாமும் பல்வேறு சோதனைகளை சந்தித்து வெற்றியை கண்டுள்ளோம். அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வோம்.

இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும், மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்களான ஜெயலலிதா, எம் ஜி ஆர் தற்போது நம்மைடையே இல்லாவிட்டாலும், நாம் தான் அவரது வாரிசுகள்.நம்மோடு இருந்து எதிரியாக செயல்பட்டு தற்போது பி டீமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், அதிமுகவினர் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதனை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம். மேலும், வழக்குகளை தொடர்ந்து அச்சுறுத்த நினைத்தால், அவை கானல் நீராக தான் போகும் எனக்கூறிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை என தெரிவித்தார்.

அதிமுகவை யாராலும் சீண்டிப்பார்க்கவோ, தொட்டுப்பார்க்கவோ முடியாது. நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் அதுதான் ஒரேநாடு, ஒரே தேர்தல் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்