தொழிலாளி மீது தாக்குதல்:வாலிபர் கைது
தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள பூசனம்பட்டியை சேர்ந்த குபேந்திரன் (வயது 38). இவர், தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வினோத்குமார் (28) என்பவர் வீட்டில் தங்கியிருந்து செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், வினோத்குமாரின் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார் கட்டையால் குபேந்திரனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த குபேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குபேந்திரன் அக்காள் மாரியம்மாள் அல்லிநகரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தார்.