பிரசவித்த பெண் மீது தாக்குதல்

மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை தாக்கியவர்களை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-25 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கடலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி தேவயானிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சூர்யா மற்றும் அவரது சகோதரர் ரகு ஆகியோர் வந்தனர். அவர்களை தனியார் நிறுவன காவலாளி டேவிட் என்பவர் பிரசவ வார்ட்டுக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும், இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் டேவிட்டை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

உறவினர்கள் முற்றுகை

இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் சூர்யா, ரகு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சையில் உள்ள தேவயானியை சிலர் சந்தித்து டேவிட்டை தாக்கியது யார் என கேட்டு அவரை திட்டி தாக்கியதாக தெரிகிறது.இதுகுறித்து தகவலறிந்த தேவயானியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் தேவயானியின் உறவினர்களை சமரசப்படுத்தி இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்