வியாபாரியின் மொபட்டுடன் தப்பிய ஆசாமி

நாகர்கோவிலில் இரவல் வாங்கிய மோட்டார் சைக்கிளை கொடுத்து விட்டு வியாபாரியின் மொபட்டுடன் ஆசாமி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-01-20 18:45 GMT

நாகர்ேகாவில்:

நாகர்கோவிலில் இரவல் வாங்கிய மோட்டார் சைக்கிளை கொடுத்து விட்டு வியாபாரியின் மொபட்டுடன் ஆசாமி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் போல பேசிய மர்மஆசாமி

நாகர்கோவில் தெற்கு திருப்பதிசாரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பெர்னாட் (வயது 46). இவர் நாகர்கோவில்-நெல்லை நான்கு வழி சாலையில் திருப்பதி சாரம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக தயாரானார். அப்போது காக்கி பேண்ட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஒரு ஆசாமி வந்தார். பின்னர் அவர் அந்த மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தினார்.

தொடர்ந்து பெர்னாட்டிடம் போலீஸ்போல பேசிய அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியாகி விட்டதாகவும், அதனால் உங்கள் மொபட்டை தந்து உதவினால் பெட்ரோல் வாங்கி வந்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்து செல்வதாகவும் கூறியிருக்கிறார். அந்த நபர் காக்கி பேண்ட் அணிந்து இருந்ததால், அவரை நம்பி பெர்னாட் தனது மொபட்டை அந்த வாலிபரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் மொபட்டை வாங்கி சென்ற நபர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெர்னாட் வடசேரி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அதிர்ச்சி

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெர்னாட் கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். பின்னர் நடத்திய விசாரணையில், அந்த மோட்டார் சைக்கிள் வடசேரி பஸ் நிலைய பகுதியில் இருந்து அந்த நபர் மது அருந்தியவரிடம் இருந்து இரவலாக வாங்கி வரப்பட்டது தெரியவந்தது. அந்த மோட்டார் சைக்கிள் பழுதானதால் பெர்னாட்டின் மொபட்டை போலீஸ்காரர் போல் நைசாக பேசி அந்த மர்ம ஆசாமி வாங்கிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் அந்த மர்மஆசாமி போலீஸ் போல பேசி வேறு ஏதேனும் பகுதியில் கைவரிசை காட்டியுள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் சமீப காலமாகவே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் மர்மஆசாமி நடத்திய மொபட் அபேஸ் சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்