மணல் கடத்தலை தடுத்ததால் கிராம நிர்வாக அதிகாரியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட்டு அதிரடி

மணல் கடத்தலை தடுத்ததால் கிராம நிர்வாக அதிகாரியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2023-09-15 18:45 GMT

மணல் கடத்தலை தடுத்ததால் கிராம நிர்வாக அதிகாரியை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு அதிடியாக தீர்ப்பு கூறியது.

கிராம நிர்வாக அதிகாரி

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் அப்பகுதியில் நடைபெற்று வந்த ஆற்று மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு புகார் அளித்து வந்தார். கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீதும் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்துவது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் கடந்த 27.10.2022 அன்று ஒரு வழக்கும், 13.4.2023 அன்று மற்றொரு வழக்கும் பதிவு செய்து உள்ளனர். இதனால் அவர்களுக்கும், லூர்து பிரான்சிசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

வெட்டிக்கொலை

கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அன்று மதியம் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரும் அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அதிகாரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதில் ராமசுப்பிரமணியன் மீது 3 கொலை முயற்சி, சாராயம் காய்ச்சியதாக 5 வழக்குகள், வழிப்பறி உட்பட மொத்தம் 15 வழக்குகளும், மாரிமுத்து மீது மணல் திருட்டு உட்பட 6 வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.

ஐகோர்ட்டு உத்தரவு

இந்த கொலை வழக்கை முறப்பநாடு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பொன் காந்திமதி நாதன் என்பவர் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால் விசாரிக்கக்கூடாது என்றும், அதற்கு பதிலாக தூத்துக்குடி ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விசாரிக்க வேண்டும் என்றும் கடந்த மே மாதம் 25-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 2 மாதங்களில் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மொத்தம் 51 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட நிலையில் 31 பேர் விசாரிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜூன் 21-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு ஜூலை 17-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து தூத்துக்குடி செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

ஆயுள் தண்டனை

இதையடுத்து இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் சாட்சிகள் விசாரணை நடந்து வந்தது. தொடர்ந்து இருதரப்பினரிடமும் குறுக்கு விசாரணை நடந்தது. பின்னர் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி செல்வம் நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு தீர்ப்பு கூறினார். அதில் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு அளித்தார்.

பலத்த பாதுகாப்பு

வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டதைெயாட்டி, ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.

மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

---------

(பாக்ஸ்) 4½ மாதங்களில் தீர்ப்பு

கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து விசாரணை நடத்தி குற்றப்பத்்திரிகை தாக்கல் செய்ததை தொடர்ந்து, தூத்துக்குடி கோர்ட்டில் விசாரணை முடிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 4½ மாதங்களில் தீர்ப்பு கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்