காதல் மனைவியை குடும்பத்தினர் பிரித்து அழைத்து சென்றதால் புதுமாப்பிள்ளை தீக்குளிக்க முயற்சி-சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருமணமான 20 நாட்களில் காதல் மனைவியை அவருடைய குடும்பத்தினர் பிரித்து அழைத்து சென்றதால் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு புதுமாப்பிள்ளை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-01-27 22:06 GMT

தீக்குளிக்க முயற்சி

சேலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராகதேவன் (வயது 24). ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். ராகதேவன் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் நுழைவு வாயில் முன்பு தான் மறைத்து கொண்டு வந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பிரித்து அழைத்து சென்றனர்

போலீசாரிடம் ராகதேவன் கூறியதாவது:-

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த நித்யா (21) என்பவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஒரு வங்கி தேர்வு எழுத வந்த போது அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

நாங்கள் இருவரும் கடந்த 6-ந் தேதி மின்னாம்பள்ளியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நித்யாவின் உறவினர்கள் என்னிடம், உங்களுக்கு மண்டபத்தில் வைத்து திருமணம் செய்து வைப்பதாக கூறி எனது காதல் மனைவியை சென்னைக்கு அழைத்து சென்றுவிட்டனர். அதன்பிறகு என்னுடைய மனைவியை அவர்கள் அனுப்பி வைக்கவில்லை. இதையடுத்து சென்னைக்கு சென்று தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனம் உடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கலெக்டர் அலுவலகம் வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தனது மனைவியை அவருடைய குடும்பத்தினர் பிரித்து அழைத்து சென்று விட்டதால் மனம் உடைந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்